சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் மே தின வாழ்த்துச் செய்தி 2010தொழிலாளரின் சேவையை நினைவு கூறும் நாளான ‘தொழிலாளர் தினம்’ மீண்டும் வந்துவிட்டது. உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் பெருமிதம் கொள்ளவேண்டிய இத்தருணத்தில் நாம் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது. சிங்கைத் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உலகே அறியும்.

கடந்த 50 ஆண்டுகால ம.செ.க- ஆட்சியில் தொழிலாளர்களின் உரிமைகள் வெகுவாக பரிக்கப்பட்டுள்ளன. ஒருகாலத்தில் தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் சார்ந்திருந்த ம.செ.க இன்று அவர்களை உதறித்தள்ளிவிட்டது. ஆட்சிபீடம் ஏறியவுடன் படிப்படியாக தொழிலாளர்களின் உரிமைகளைப் பரித்ததோடு தொழிற்சங்கங்களையும் ஒடுக்கிவிட்டது. இன்றைய தொழிலாளர்கள் மதிப்பும் மரியாதையும் அற்ற செல்லாக் காசுக்கு சமமானவர்கள் என்பதை நாடே அறியும்.

இதற்கெல்லாம் காரணம் அரசின் சித்தாந்தத்திலே ஏற்பட்ட பெரிய மாற்றமே என்பதை நாம் அறிவோம். பொது கொள்கையை ஆதரித்து அரசு அமைத்த அன்றய ம.செ.க தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டியது. தொழிலாளர்களும் தொழிற்சங்கங்ளும் வெகுவாக மதிக்கப்பட்டன.

ஆனால், இன்றைய அரசு முதலாளித்துவத்தை அல்லவா ஆதரிக்கிறது. அப்படியிருக்க தொழிலாளர்கள் மதிக்கப்படுவது தேவையற்ற ஒன்றாக மாறிவிட்டது. இன்றைய தொழிலாளர்கள் தேவையற்றவர்கள் என்பதும் தொழிற்சங்கங்கள் அவசியமற்றவை என்பதும் ம.செ.க. அரசின் புதிய சித்தாந்தம்.

இன்று நமது நாட்டின் மக்கள் தொகை 5 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3 மில்லியன் பேர் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாட்டின் பெரும் பகுதி மக்கள் தங்களின் வருமாணத்தை நம்பியே வாழ்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தொழிலில் நிரந்தரமற்ற சூழலில் நமது இன்றைய தொழிலாள நண்பர்கள் வாழ்கின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் என்ற சூழ்நிலை மறைந்து பல வருடங்கள் ஆகின்றன. ம.செ.க. அரசு 1960ம் ஆண்டுமுதல் பல தொழிலாளர் சட்டங்களைப் படிப்படியாக அறிமுகம் செய்து தொழிலாளர்களை நலிவுறச்செய்துவிட்டது. அவர்களின் உரிமைகள் பரிக்கப்பட்டதோடு பேச்சுரிமையும் இழந்து வாழ்கின்றனர். தொழிலாளர்களை பிரதிநிதித்து அவர்களின் நலனுக்காக பாடுபட சுதந்திரமாக செயல்படும் ஒரு தொழிற்சங்கம் நம்மிடையே இன்று இல்லை. இது வருந்தத்தக்க சூழ்நிலை என்பதை பலரும் அறிவர். அவர்களுக்காகக் குரல் கொடுக்க தொழிலாளர் பிரதிநிதித்துவம் இல்லை. வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையால் மேலும் நலிவுற்றுவரும் நமது சிங்கைத் தொழிலாளர்களின் நிலையை முன்வைத்து போராட நமக்கு தொழிற்சங்கங்களும் இல்லை. தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பு தொழிலாளர்களைப் பிரதிநிதிப்பதாக கூறிக்கொண்டாலும் தொழிலாளர் நலனில் அது அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. அமைச்சர் ஒருவரை தலைவராகக்கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு எவ்வாறு அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியும்.

தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் சுதந்திரமாக இயங்கும் ஒரு தொழிற்சங்கம் நமக்குத் தேவை. அரசோடு கைக்கோர்த்து செல்லும் தொழிற்சங்க காங்கிரஸால் பயன் அடைவது அரசாங்கமே தவிர தொழிலாளர்கள் இல்லை.

இந்த ம.செ.க. அரசால் தொழிலாளர்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு தனது 50 ஆண்டுகால ஆட்சியால் தொழிலாளர்கள் முதல் தர வாழ்க்கையை அடைந்துள்ளனர் என்று கூறிக்கொண்டாலும் உண்மை நிலை அதுஅல்ல என்பதை பலரும் அறிவர்.

சிங்கையில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களும் துமாசிக் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களும் தமது போக்கை மாற்றிக்கொண்டாலே ஒழிய தொழிலாளர்கள் மேன்மைநிலை அடைவதென்பது வெறும் பகல் கனவே. முதலீட்டாளர்களின் நலம் பேண அமைப்புகள் இருக்கும்போது தொழிலாளர் நலன் காக்க சுதந்திரமாக இயங்கும் தொழிற்சங்கம் தேவை என்பதை சிங்கப்பூர் ஜனநாயக கட்சி (சி.ஜ. க.) என்றென்றும் வலியுறுத்தி வருகிறது. தொழிலாளர் நலனை மேம்படுத்த வேண்டுமானால் முதலில் குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wage) என்ற சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அதோடு வாரத்துக்கு இத்தனை மணி நேர வேலை என்ற முறை நடைமுறைபடுத்தப்பட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழில் நிறுவனங்களால் நன்முறையில் நடத்தப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம் ஆவன செய்யவேண்டும். அப்போதுதான் தொழிலாளர் நிலை உயரும். வாழ்க்கையும் மேம்படும்.

இத்தகைய மாற்றங்களை ம. செ. கட்சியின் ஆட்சியில் எதிர்ப்பார்க்க முடியாதுதான். இன்றைய பொருளியல் சூழலில் நமது தொழிலாளர்கள் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எற்ப செயல்படவேண்டிய நிலை உள்ளது. தொழிற்சங்க காங்கிரஸ் அரசோடு கைக்கோர்த்து செயல்படும்போது தொழிலாளர்களால் என்ன செய்ய முடியும். அமெரிக்காவின் பொருளியல் நிலை சீரடையும்வரை நமது அரசின் போக்கு மாறப்போவதில்லை.

தற்போது நமது சி. ஜ.க. ஒரு புதிய பொருளியல் கொள்கையை முன் வைக்கிறது. இதன் மூலம் ஒரே சீரான பொருளியல் வளர்ச்சியை நாடு அடைய முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். நாட்டை புத்தாக்க சிந்தனையோடு செயல்படும் சமுதாயம் கொண்ட நாடாக மாற்ற முடியும். 21-ம் நூற்றாண்டில் துனிந்து செயல்படும் சமுதாயமாக உருவெடுக்க முடியும்.

இந்த மே தின நன்னாளில் அடக்குமுறை ஆட்சியின் போக்குக்கு முடிவு காணும் வகையில் ஒரு புதிய பொருளியல், சமுதாய, அரசியல் மாற்றத்திற்கு வித்திடுவோமாக.

சிங்கப்பூர் ஜனநாயக கட்சி அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தனது மே தின வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்வதோடு ஒளிமயமான எதிர்காலத்தை வரவேற்க ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறது.காந்தி அம்பலம்
தலைவர்
சிங்கப்பூர் ஜனநாயக கட்சி

தமிழ் (Tamil language) Wednesday, 26 May 2010 SingaporeDemocrats Print

LEAVE A COMMENT