மாற்றுப் பொருளியல் கொள்கை - ஒரு பார்வை

Tan Kin Lianமுன்னாள் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (NTUC) காப்புறுதிப் பிரிவின் CEO வும் பொருளியல் ஆய்வாளருமான திரு தான் கின் லியன் (Mr Tan Kin Lian) அவர்கள் சி.ஜ.க.-வின் பொருளியல் கொள்கைக்கான பரிந்துரையைப் பாராட்டிப் பேசியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் நமது கட்சியின் அறிக்கையை அறிவுப்பூர்வமான அறிக்கை என்று வர்ணித்துள்ளார்.

திரு தான் அவர்கள் கணினியில் ஒரு தனி இணைய தளத்தை இயக்கி வருவதோடு அதில் அவரது கருத்துகளையும் அவ்வப்போது எழுதி வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் மக்களிடையே பெரும் பரபரப்பையும் ஆவலையும் ஏற்படுத்தி உள்ளன என்று கூறுவது மிகையாகாது. நமது ஊழியர்களுக்கான வருமான இடைவெளி மேன்மேலும் அகன்று வருவது வருத்தம் தரும் ஒன்று என்று அவர் கூறியது அனைவரது வரவேற்பையும் பெற்றது. மாற்றுப் பொருளியல் கொள்கையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

கடந்த 2008ம் ஆண்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட சில குழப்பமான சூழ்நிலையில் முதலீட்டாளர்களின் நலன் குறித்துத் திரு தான் அவர்கள் குரல் கொடுத்தது அவரை நாடறியச் செய்தது. அவர் பேச்சாளர் சதுக்கத்தில் வாராந்திரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து முதலீட்டாளர்களின் வேதனை நிலையை வெளிப்படுத்தியது அவரைப் பிரபலப்படுத்தியது.

திரு தான் அவர்கள் அனைவருக்கும் பயன்படும் பொருளியல் கொள்கை சிங்கப்பூருக்குத் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். இதுவே நமது கட்சியின் பொருளியல் கொள்கையும் கூட. நாட்டின் பொருளியல் கொள்கை அனைவருக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதுதான் நமது கட்சியின் போராட்டம். ஆனால் இன்றுள்ள நாட்டின் பொருளியல் கொள்கையால் பணம் படைத்தவர்களிடமே மேன்மேலும் செல்வம் சென்று குவிகிறது. இதனால் வறுமையில் வாழ்பவர் நிலை மோசமடைந்து வருகிறது.

நமது ஜனநாயகக் கட்சியின் கொள்கை

1. பொருளியல் வளர்ச்சியைக் கணக்கிட நாம் கையாளும் முறை முற்றாக மாற்றப்பட வேண்டும். இன்றைய GDP முறையால் ஏழைகளின் பொருளியல் பலத்தைச் சரியாக கணக்கிட முடியாது. எனவே சி.ஜ.க. முறையான வளர்ச்சிக் குறியீட்டு முறையை (Genuine Progress Index) அறிமுகம் செய்ய பரிந்துரைக்கிறது. இதனை GDP யுடன் இணைத்து நடைமுறை படுத்தலாம்.

2. குறைந்த பட்ச வருமான முறையை (Minimum Wage) சட்டமாக்கி அமுல்படுத்த வேண்டும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பயனுக்காக அரசு அதிமாகச் செலவு செய்யவேண்டும் அதோடு வயதானவர்கள் நலனிலும் அரசு அதிக அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன்வழி அவர்களின் நலன் நன்கு பேணப்படுவதோடு அவர்களுடைய அன்றாட பண புழக்கத்தையும் மேம்படுத்த முடியும். இதனால் நாட்டின் பொருளாதாரநிலை மேன்மேலும் வளர்ச்சியடையும்.

3. வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் பன்னாட்டு நிறுவனங்களையும் அதிகம் சார்ந்து நிற்காமல் நமது நாட்டிலேயே உள்நாட்டு நிறுவனங்களையும் தொழிலதிபர்களையும் உருவாக்க ஆவன செய்யவேண்டும். இந்த சூழலை உருவாக்குவதற்கு ஏதுவாக அரசு சார்ந்த வர்த்தக நிறுவனங்களை முதலில் குறைக்க வேண்டும். பின்னர் அவற்றை அடியோடு இல்லாமல் செய்யவேண்டும். அப்போதுதான் உள்நாட்டு நிறுவனங்கள் தலையெடுக்க முடியும். நமது தொழிலாளர்களின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளி இந்த அளவிற்கு மோசமானதற்கு மேற்கூறப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும் அரசு சார்ந்த நிறுவனங்களுமே (GLCs) காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமான மாற்றுத் திட்டங்களையும் தொலை நோக்குப் பார்வையையும் மக்களிடம் முன் வைப்பதில்லை என்று பலமுறை ம.செ.க. குறை கூறிவந்துள்ளது. இதில் எள்ளளவும் உண்மை இல்லை. சி.ஜ.க. பலமுறை ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன் வைத்தும் அவற்றை அரசு ஏற்க மறுத்துள்ளதை சிங்கப்பூரர் நன்கு அறிவர்.

வரும் தேர்தலின்போது சி.ஜ.கட்சி நாட்டின் வளர்ச்சிக்குப் பயனளிக்கக் கூடிய ஆக்கப்பூர்வமான பொருளியல் கொள்கைகளை முன் வைத்து வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. எங்களின் பொருளியல் கொள்கை குறித்த விளக்கமறிய விரும்புவோர். இணையதளத்தைப் பார்வையிடவும்.

தமிழ் (Tamil language) Monday, 01 November 2010 SingaporeDemocrats Print

LEAVE A COMMENT