குறைந்த பட்ச ஊதியம்

திரு லீ குவான் யூ அவர்கள் குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் முறை அவ்வளவு பொருத்தமானதன்று என்றும் அதனைச் சட்டமாக்கினால் பலர் வேலை வாய்ப்பை இழப்பர் என்றும் கூறினார். அதோடு இத்தகைய சட்டத்தினால் நமது பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் கூறினார். இது ஒரு குறுகலான பார்வை என்பதையும் அடிப்படையற்ற பார்வை என்பதையும் நாம் அறிவோம். ஆனால், இக்கருத்துக் குறித்து எந்தவொரு விவாதமும் எழுப்பப்படாதது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

நமது மதியுரைஞரின் கூற்றுப்படி ஒவ்வொரு தொழிலாளரின் வருமானமும் சந்தை நிலவரத்தை ஒட்டியே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் இங்குத் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு $3 வெள்ளியும் அமைச்சருக்கு $1000 வெள்ளியும் வழங்கப்படவேண்டும் என்ற முறை நடப்பில் உள்ளது. இது எந்தச் சந்தை நிலவரத்தைப் பொறுத்தது என்பதை மதியுரைஞர்தான் விளக்கவேண்டும்.

விலைவாசி மிகுந்த சிங்கப்பூரில் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவான ஊதியத்தை வழங்கி வாழச் சொல்வது மனிதாபிமானமற்ற செயல். இதனால் அவர்களின் உற்பத்தித்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித்திறனும் ஊதியமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது என்பதைக் கருத்திற்கொண்டு சம்பளத்திட்டம் அமையவேண்டும்.

இதன் காரணமாகத்தான், குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு மணிக்கு இத்தனை வெள்ளி என்று சட்டப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சி.ஜ.க) போராடி வருகிறது. தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படச் செய்ய இதுவே சிறந்த முறை. ஆனால், முதலாளிகளும் வியாபாரிகளும் இச்சட்டத்தை ஒரு போதும் ஆதரிக்கமாட்டார்கள். ஏனெனில் இச்சட்டம் அமுல் செய்யப்பட்டால் அவர்களின் இலாபம் பாதிக்கப்படும் என்பதை அவர்கள் நன்கு அறிவர். ஆனால், வருமான உயர்வு தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை மேம்படச் செய்யும் என்பதை அவர்கள் உணரத் தவறி விடுகிறார்கள். நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

ஏற்புடைய ஊதியம் கிடைப்பதால் தொழிலாளர் உற்பத்தித்திறன் கூடுவதோடு செலவீனங்களை ஈடுகட்ட அவர்கள் பகுதிநேர வேலைகளைத் தேடி அலைய வேண்டியதில்லை. அதோடு வருமான குறைவால் ஏற்படும் மன உளைச்சலுக்கு ஆளாகி அமைதியின்றி மனக்கசப்புடன் வேலை செய்யவேண்டிய அவசியமில்லை.

குறைந்த பட்ச ஊதியமுறை நடைமுறைபடுத்தப்பட்டால் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதோடு அவர்களின் மேம்பாட்டிற்காக அரசு மேற்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவையும் ஏற்படாது. சட்டத்தை நடைமுறைபடுத்துவதிலும் எந்தச் சிக்கலுமில்லை.

இன்று உலக நாடுகளில் 90% - க்கு மேல் "குறைந்த பட்ச ஊதியம்" என்ற சட்டத்தை நடைமுறை ஆக்கியுள்ளன. பஹ்ரேன் (Bahrain), கார்தார் (Qatar, UAE), தொங்கா (Tonga) புருணை (Brunei), சோமாலியா (Somalia) ஆகியவை இச்சட்டத்தை நடைமுறைபடுத்தாத நாடுகளில் சிலவாகும். சிங்கப்பூரும் இந்த வரிசையில் உள்ள மற்றொரு நாடு என்பது வருந்தத்தக்க செய்தி.

ஹோங் கோங் (Hong Kong) போன்ற மிகச் சிறிய இடத்தில் கூட வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்குக் குறைந்த பட்ச ஊதியமாக HK$3,580 (S$680) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைப் பலரும் வரவேற்றுள்ளனர். பொருளியல் நிபுணர்கள் கூட இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி நமது தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு $6.80 ஆக இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இந்தத் தொகை ஒருவர் வார ஊதியமாக சுமார் $300 பெற்றால்தான் சராசரி வாழ்க்கை நிலையில் வாழமுடியும் என்பதை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு 44 மணிநேர வேலை என்ற அடிப்படையில் ஒருவருக்கு ஊதியம் வழங்கப்பட்டால் தொழிலாளர் பெரிதும் பயன்பெறுவர். ஆகக் குறைவான ஊதியம் பெறும் நமது தொழிலாள நண்பர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டியது நமது கடமை இல்லையா?.

தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக இந்தக் குறைந்த பட்ச முறையை நடைமுறைபடுத்த சிங்கப்பூரர்களாகிய அனைவரும் சி.ஜ.க. நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழ் (Tamil language) Wednesday, 16 June 2010 SingaporeDemocrats Print

LEAVE A COMMENT